Published : 23 Dec 2023 06:03 AM
Last Updated : 23 Dec 2023 06:03 AM
சென்னை: குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில், நிலுவை வழக்குகளை விரைந்துமுடிக்க நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நிலுவையில் உள்ள குற்றம் மற்றும் விசாரணை வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீண்ட நாட்கள் விசாரணை நடைபெற்று வரும்வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் எழும்பூரில் நேற்று காலை நடைபெற்றது. சென்னை பெருநகர குற்றவியல் நீதித் துறை, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டமாக இது நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நீதித் துறை சார்பில் சென்னை நகர சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி அல்லி, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நடுவர் கோதண்டன், எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற கூடுதல் முதன்மை நடுவர் கிரிஜா ராணி உட்பட 27 நீதிமன்ற நடுவர்கள் பங்கேற்றனர். இதேபோல், காவல்துறை சார்பில் சென்னை காவல் ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர், தலைமையில்கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு),அஸ்ரா கார்க் (வடக்கு), பி.கே.செந்தில்குமாரி (மத்திய குற்றப்பிரிவு) உட்பட காவல் துறையைச் சேர்ந்த 55 அதிகாரிகளும், அதேபோல் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உதவி அரசு வழக்கறிஞர்கள் என மொத்தம் 20 அரசு வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில், நிலுவையில் உள்ள விசாரணைவழக்குகளை விரைந்து முடிக்கவும், நீண்ட நாட்கள் விசாரணைநடைபெற்று வரும் வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடிக்கவும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், வழக்கு விசாரணைகளின்போது, விசாரணை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும்,முதல் தகவல் அறிக்கைகள் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படுவது குறித்தும், வழக்கு விசாரணைகளின்போது ஆஜராவது குறித்தும்,சாட்சியங்களை ஆஜர்படுத்துவது குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT