Published : 23 Dec 2023 07:30 AM
Last Updated : 23 Dec 2023 07:30 AM

அதிகாரி இடமாற்றத்தைக் கண்டித்து 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் 5 இடங்களில் மறியல்: போக்குவரத்து கடும் பாதிப்பு

வில்லியனூர் எம்ஜிஆர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

புதுச்சேரி: புதுச்சேரி ஊரகப் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்தக் கோரியும், திட்ட இயக்குநர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 5 இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுகின்றன. புதுச்சேரியில் 100 நாள் வேலைத் திட்டம் முறைப்படி செயல்படுத்தப்படவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து 100 நாள் வேலைத் திட்டத்தை அதிக நாட்கள் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சத்தியமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்கக் கோரி பாகூர் தூக்குப் பாலம் பகுதியில் அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அவ்வழியே சென்ற பேருந்துகளையும் சிறைபிடித்தனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதேபோல் அரியாங்குப்பத்தில் 100 நாட்கள் வேலை கோரியும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி இடமாற்றத்தைக் கண்டித்தும் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் கண்காணிப்பாளர் வீர வல்லவன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தார். 100 நாள் வேலை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பம், மதகடிப்பட்டு மற்றும் வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு பொதுமக்களை சமரசம் செய்து மறியலை கைவிடச் செய்தனர். இதற்கிடையில் திருக்கனூர் கே.ஆர்.பாளையம் பகுதியில் மறியல் போராட்டம் நடத்த வந்தவர்களை போலீஸார் தடுத்து அனுப்பி வைத்தனர். 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் கூறுகையில், “100 நாள் வேலைத் திட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ.50 கோடியை ஊதியமாக மக்களுக்கு சென்றடைய திட்ட இயக்குநர் சத்தியமூர்த்தி பணியாற்றியுள்ளார். தற்போது விவசாயத்துறையிலும் 100 நாள் திட்ட பயனாளிகளை பயன்படுத்த இருந்தார். கிராமப் பகுதிகளில் இருக்கும் ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அதிகாரியை மாற்றியது ஏன்? அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x