டாக்டர் சுப்பையா கொலை: குண்டர் சட்டத்தில் 4 பேர் அடைப்பு

டாக்டர் சுப்பையா கொலை: குண்டர் சட்டத்தில் 4 பேர் அடைப்பு
Updated on
1 min read

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்தவர் சுப்பையா. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவரை நிலத்தகராறு காரணமாக கடந்த செப்டம்பரில் ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக பாசில் என்ற வழக்கறிஞர், அவரது சகோதரர் போரிஸ், இவர்களின் பெற்றோர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலைத் திட்டத்தை தயாரித்துக் கொடுத்ததாக திருநெல்வேலி இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கொலையாளிகளான ஜேம்ஸின் உதவியாளர்கள் முருகன், அய்யப்பன், செல்வபிரகாஷ் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வில்லியம்ஸ் என்ற வழக்கறிஞரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

கொலையில் ஜேம்ஸ் சதீஷ்குமார், அவரது உதவியாளர்கள் முருகன், அய்யப்பன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு நேரடி தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் திரிபாதி உத்தரவிட்டார்.

ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்பட 4 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு, கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in