Published : 18 Jan 2018 10:09 AM
Last Updated : 18 Jan 2018 10:09 AM

கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கக் கோரி திருவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் உண்ணாவிரதம்: நெல்லை ஆர்ப்பாட்டத்தில் ஆழ்வார்திருநகரி, திருக்குறுங்குடி ஜீயர்கள் பங்கேற்பு

கவிஞர் வைரமுத்து திருவில்லிபுத்தூருக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கக் கோரி, திருவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் சுவாமிகள் நேற்று தனது மடத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார்.

கவிஞர் வைரமுத்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வந்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும், அதுவரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூறி, திருவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் நேற்று காலை ஆண்டாள் கோயிலில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.

ஆனால், அதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த அவர் பின்னர், தனது மடத்திலேயே உண்ணாவிரதம் இருந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘கவிஞர் வைரமுத்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் வந்து நான் பேசியது தவறு, இனிமேல் எந்தவொரு மதத்தின் கடவுளையும் பேச மாட்டேன் எனக் கூறி மன்னிப்பு கேட்கும் வரை எங்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்’ என்றார்.

டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் ஜீயர் சுவாமிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் சரஸ்வதி, சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், கூடுதல் எஸ்.பி. மதி ஆகியோரும் ஜீயர் சுவாமிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட ஜீயர் சுவாமிகள் மறுத்துவிட்டார். நாட்டுப்புறப் பாடகரும், முன்னாள் பேராசிரியையுமான விஜயலட்சுமியும், அவரது கணவர் நவநீதகிருஷ்ணனும் ஜீயர் சுவாமிகளுடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

நெல்லையில் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஆழ்வார்திருநகரி ஸ்ரீமத் பரமஹம்ஸ எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

பாஜக மாநில துணைத்தலைவர், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், அகில பாரத துறவியர் சங்க இணைச் செயலாளர் ராகவானந்தா சுவாமி, திருநெல்வேலி சாரதா கல்லூரி செயலாளர் பக்தானந்த மகராஜ், பரகால ராமானுஜதாசன் சுவாமி, பெருங்குளம் செங்கோல் ஆதீனம், திருவல்லிக்கேணி கிருஷ்ணப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x