

சக மனிதன் என்ற பிரக்ஞையே இல்லாமல், வேங்கைவயலில் குடிக்கும் தண்ணீரில் மனிதக் கழிவை கலந்த மனிதநேயப் புனிதர்களை ஓராண்டாகியும் தேடிக் கொண்டேயிருக்கும் இந்த மண்ணில் கடந்த ஆண்டு முழுக்கவே மனிதக் கழிவின் நாற்றத்தைப் பரப்பியவர்கள், இந்த ஆண்டு முழுக்க நிகழ்த்திய சாதிய வன்கொடுமைகளின் வழியே ரத்தத்தின் கவிச்சியைப் பரப்பியிருக்கின்றனர். அந்த வகையில் 2023-ம் ஆண்டும், தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் நிறைந்த ஆண்டாகவே இருந்துள்ளது. கருவில் இருக்கும் சிசு தொடங்கி, இறந்த பிறகு இடுகாட்டுக்கு செல்லும் இறுதிப் பயணம் வரை நிகழ்த்தப்பட்ட சில சாதிய கொடுமைகளின் தொகுப்பு இது.
70 ஆண்டுகளுக்குப் பின்... - 2023-ம் ஆண்டின் தொடக்கமே, பட்டியலின மக்களுக்கு, இந்த மண்ணில் வாழ சம உரிமை கிடைத்துவிட்ட நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆண்டுபோல துவங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் 70 ஆண்டுகளுக்குப் பின் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்கள் ஆட்சியர், காவல்துறை எஸ்பி, அரசு உயர் அதிகாரிகளின் பாதுகாப்போடு அனுமதிக்கப்பட்டனர்.
பொது பாதையில் செல்ல அனுமதி மறுப்பு: தூத்துக்குடி மாவட்டம், நடுவக்குறிச்சி கிராமத்தில், உயிரிழந்த 72 வயதுடைய பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடல் பொது பாதையில் எடுத்து செல்ல அந்த கிராமத்தில் உள்ள மற்றொரு சாதியினர் அனுமதி மறுத்தனர். இதனால், உயிரிழந்தவரின் உடலை பயிர் செய்யப்பட்டிருந்த விவசாய நிலத்தின் வழியாக எடுத்து சென்று இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
பெண் மீது தாக்குதல்: கலப்பு திருமணம் செய்த கணவர் வெளிநாட்டுக்கு வேலை சென்றுவிட்ட நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டியலினப் பெண் தனது குழந்தைகளுடன் கணவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் வசித்து வந்தார். இதனால், அப்பெண்ணுக்கு பல தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தெருவில் நடக்கக் கூடாது என்பதற்காக முள்வேலி வைத்து அடைத்தது உடன், பக்கத்து வீட்டுக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். பட்டியலின பெண்ணை மற்ற சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டையைக் கொண்டு தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாசி மக விழா: கடலூர் மாவட்டம் புவனகிரி சாத்தப்பாடி கிராமத்தில் பட்டியலின மக்கள் மாசிமகத்தையொட்டி திருவிழா கொண்டாடினர். இதில், சாமியை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு பிச்சாவரம் வரை சென்று திரும்புவது வழக்கம். இந்த ஊர்வலத்தின்போது, பாடல்களை ஒலிபரப்பியவாறு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது மேலமணக்குடி என்ற பகுதியிலிருந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பாடலை ஒலிபரப்பக் கூடாது என சொல்லியிருக்கின்றனர். இதனால், ஏற்பட்ட தகராறு கைக்கலப்பாக மாறியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மற்றொரு சமூகத்தினர், ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டிருந்த பட்டியலின இளைஞரையும், அவர்களது பெற்றோர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
நாங்குநேரி சம்பவம்: திருநெல்வேலி நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது பட்டியலின மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள், தன்னை சாதி ரீதியாக துன்புறுத்துவதாக, பட்டியலின மாணவர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை ஏற்று, துன்புறுத்தலில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம் கண்டித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், பட்டியலின மாணவரின் வீட்டுக்குள் சென்று அவரை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். இதனை தடுக்க வந்த மாணவரின் தங்கைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
10-ம் வகுப்பு மாணவர் மீது தாக்குதல்: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவர், தனது பாட்டியுடன் வசித்து வந்தார். பேருந்தில் பள்ளிக்குச் சென்று வரும்போது, புலியூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், பட்டியலின மாணவரை சாதி பெயரைச் சொல்லி திட்டியுள்ளார். இதை அந்த மாணவர் தனது பாட்டியிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, மாணவரின் பாட்டி 12-ம் வகுப்பு மாணவரை, பேருந்து நிறுத்தத்தில் வைத்து நியாயம் கேட்டிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர், தனது ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, 10-ம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது பாட்டியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கருவை கலைக்கச் சொல்லி தாக்குதல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, கணவரின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கர்ப்பிணியான பட்டியலின பெண்ணின் கருவை கலைக்கச் சொல்லி, கணவனின் குடும்பத்தினர் பட்டியலின பெண் மீது தாக்குதல் நடத்தினர். கருவைக் கலைக்க பெண் மறுத்த அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, வழக்குப் பதிவு செய்த மாத்தூர் காவல்துறையினர், அப்பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.
காலை உணவு உண்ண மறுத்துப் போராட்டம்: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திட்டம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கரூர் மாவட்டம் வேலன்செட்டியூர், கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில், இந்த காலை உணவை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமைத்த காரணத்தால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்போது அங்கு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பிரபு சங்கர் நேரடியாக சென்று அங்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பட்டியலின பெண் சமைப்பதை தங்களது குழந்தைகள் சாப்பிட முடியாது என்று குழந்தைகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களது குழந்தைகளின் டிசியைக் கொடுக்க வேண்டும் என்றும், தாங்கள் வேறு பள்ளிக்குச் சென்று குழந்தைகளை சேர்க்கப்போவதாகவும் கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த ஆட்சியர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தைகள் உணவருந்த அவர்களது பெற்றோர் சம்மதித்தனர். இச்சம்பவம் அப்போது பேசுபொருளானது. தொடர்ந்து அந்த திட்டம் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுநீர் கழித்து தாக்குதல்: திருநெல்வேலி மாவட்டம் மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தாமிரபரணியில் குளிக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், குளிக்க வந்தவர்களை சாதியைக் கேட்டு மிரட்டி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், அந்த இளைஞர்களின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி, அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். மேலும், அவர்களது ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து, தேசிய பட்டியலின நல ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.
குடியிருப்பு முன் தீ வைக்கப்பட்ட சம்பவம்: கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்கடி இருதரப்பு மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள கோயில் ஒன்றின் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. பாலீஷ் போடும் வேலை நடந்ததால், அதிலிருந்து தூசி வெளியேறியது. இதுதொடர்பாக வேலை பார்த்தவர்களிடம், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், வலை அமைத்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பட்டியலின பெண் ஒருவரின் வீட்டின் முன்பாக தீவைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இருதரப்பைச் சேர்ந்தவர்களையும் கைது செய்துள்ளனர்.
மனமுடைந்த மாணவரின் விபரீத முடிவு : புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் உள்ளது கொப்பம்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருடன், கீரனூர் பேருந்து நிலையத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்த அம்மாணவியின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியலின மாணவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அடுத்தநாள் பள்ளி மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் வைத்து அந்த மாணவரை தாக்கி, கடுமையாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் மனமுடைந்து போன அந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாடகர் மீது தாக்குதல்: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ஆய்க்குடி பகுதியில் உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரகாஷ். இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியிலும் பாடி வந்தார். இந்த நிலையில், தீபாவளியன்று பட்டாசு, காய்கறி வாங்கிக்கொண்டு அவரும் அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மேலுடையாண்பட்டி அருகே அவரை வழிமறித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட முயற்சித்தனர். இதிலிருந்து விலகிச் செல்ல முயன்ற பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் மீது பாட்டில் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தலையில் படுகாயமடைந்த பிரகாஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
6 வயது சிறுவன் மீது தாக்குதல்: மதுரை அவனியாபுரம் - விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடியில் ஊரின் நாடக மேடை மீது, பட்டியலின இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இருவர், கண்ணா இங்கு வந்தானா என்று கேட்டுள்ளனர். அதற்கு தங்களுக்கு தெரியாது என பதிலளித்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வாளால் தாக்குதல் நடத்தினர். இதில் மேடையில் இருந்த பெரியவர் ஒருவர் மற்றும் அவரது 6 வயது பேரன் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
கோழி திருட வந்ததாக வழக்குப் பதிவு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள வெங்கமேடு அருகே பட்டியலின இளைஞர் இருவர் தனிமையான இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் அந்த இளைஞர்களை தாக்கி, அவர்களது இருசக்கர வாகனத்தை பறித்து சென்றுள்ளனர். வாகனம் இல்லாமல், வீட்டுக்கு செல்ல முடியாததால், அங்கேய இரவு முழுவதும் இருவரும் தங்கியிருந்தனர். காலையில், முதல் நாள் இரவு தங்களை தாக்கிய நபர்களில் ஒருவரை கண்டதும், அவரிடம் இருசக்கர வாகனத்தைக் கேட்டுள்ளனர்.
இதையடுத்து ஊருக்குள் சென்று மேலும் சிலரை அழைத்து வந்த அந்த நபர், பட்டியலின இளைஞர்கள் இருவரையும் பலமாக தாக்கினர். மேலும், சாதி பெயரைச் சொல்லி திட்டி அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இருவர் கொடுத்த புகாரின் பேரில், 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதைவிடக் கொடுமை, ஊர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில், பட்டியலின இளைஞர்கள் கோழி திருட வந்ததாக அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுதான்.