

சென்னை: சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை அடுத்து, எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை பொன்முடி இழந்துள்ளார். அவர் வகித்து வந்த உயர்கல்வி துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியை பொன்முடி இழந்தார். இதையடுத்து, அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.
தொடர்ந்து, பொன்முடி வகித்துவந்த உயர்கல்வி துறை அமைச்சர் பதவியை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதை ஏற்று, ஆளுநர் தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதல்வரின் பரிந்துரையை ஏற்று, பொன்முடி வசம் இருந்த உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய உயர்கல்வி துறை தற்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக வழங்கப்படுகிறது. ராஜகண்ணப்பன் கவனித்து வந்த காதி, கிராமத் தொழில்கள் வாரியம், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதலாக ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.