

சென்னை: தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக கடந்த டிச.19-ம் தேதி தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாக இருந்தது. சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும், ஓரிரு இடங்களில் அதிமிக கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் அதிமிக கனமழையை எதிர்கொள்ள தயாரானோம். ஆனால், மழை அப்படி பெய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் 2 நாட்களில் 116 செமீ மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு எந்த முயற்சி எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. வானிலை மையத்தின் கணிப்பு 50 செமீ என்று தெரிவித்தால், அதற்கேற்ப தயாராகலாம். அவர்கள், 21 செமீ இருந்தால் அதிகனமழை என்கின்றனர்.
ஆனால், 100 செமீ இருந்தாலும் அதையும் அதி கனமழை என்று தெரிவிக்கின்றனர். இதனால் ஓரளவுக்குதான் நாம் தயாராக முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அமைச்சர்கள் சிலரும், முதல்வர் ஸ்டாலினும், இவ்வளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வானிலை என்பது நாளுக்கு நாள், மணிக்கு மணி மாற்றத்துக்குரியது. 14-ம் தேதியே தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டது. 15, 16 தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டது. 17-ம் தேதி அதிகனமழை வாய்ப்பு தெரிந்தவுடன் அதிகனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டது. வானிலை முன்னறிவிப்பில் 6 செமீ மழை மிதமான மழை (மஞ்சள் எச்சரிக்கை), 11 செமீ வரை கனமழை (ஆரஞ்சு எச்சரிக்கை), 21 செமீக்கு மேல் எவ்வளவு பதிவானாலும் அதிகனமழை (சிவப்பு எச்சரிக்கை) என எச்சரிக்கை வழங்கப்படுகிறது. 21 செமீக்கு மேல் இவ்வளவு மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை வழங்கப்படுவதில்லை. முறையாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. இந்த தரவுகள் வானிலை ஆய்வு மைய எக்ஸ் தள பக்கத்திலும் உள்ளது. வானிலையை நாங்கள் அறிவியல் ரீதியாக பார்க்கிறோம். அறிவியலை கேளுங்கள் பேசுகிறேன். எனக்கு அரசியல் பேச தெரியாது என்றார்.