Published : 31 Jan 2018 01:39 PM
Last Updated : 31 Jan 2018 01:39 PM

அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கலாம்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் யோசனை

காவிரி பிரச்சினையில் சித்தராமையாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி முயற்சியை வரவேற்றுள்ள ஸ்டாலின், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று பிரதமரை சந்திக்கலாம் என்று  முதல்வருக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று தனது கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

காவிரி தண்ணீர் பெறுவதற்காக கர்நாடக முதல்வரை,  தமிழக முதல்வர் சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறதே?

கர்நாடக மாநில முதல்வரை தமிழக முதல்வர் சந்திக்கப் போவதாக செய்தி வெளியாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டியது. அவரை சந்திக்கப் போகிறாரா, இல்லையா என்பது வேறு. என்றாலும், இதை முன்கூட்டியே அவர் செய்திருக்க வேண்டும். ஆனால், காலம் கடந்து இப்போதாவது இதனை மேற்கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும், தமிழக விவசாய சங்கங்களின் நிர்வாகிகளையும் அழைத்துச் சென்று, கர்நாடக மாநில முதல்வருக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, சிறிது பயனிருக்கும் என்பது எனது நம்பிக்கை.

அதுமட்டுமல்ல, தேவைப்பட்டால் இங்கிருக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் முதல்வர் ஒன்று திரட்டி, டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் அவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறார்களே?

மாணவர்களின் போராட்டத்தை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்பதற்காக, இப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக, நேற்றைய தினம் வேலூரில் போராடிய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தப் போக்கை உடனே கைவிடுவதோடு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்ற மாணவர்களையும், அரசியல் கட்சியினரையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள் மீது தொடர்ந்துள்ள வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

போக்குவரத்து கட்டண உயர்வை ரத்து செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஏற்கெனவே, அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தி, ஏறக்குறைய 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்று, சிறைகளில் போதிய இடமில்லாத காரணத்தால், திருமண மண்டபங்களில் எங்களை எல்லாம் தங்கவைத்து, பிறகு மாலையில் விடுதலை செய்தார்கள்.

மீண்டும் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, தொடர்ந்து போராட்டங்களை பல்வேறு விதங்களில் முன்னெடுப்பது குறித்து ஆலோசனை செய்யவிருக்கிறோம். எதிர்வரும் 6-ம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் கூட்டி, அதன்பிறகு முடிவெடுக்கப்படும்.

குட்கா வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட தமிழக அரசுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகின்றனவா?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, இருதரப்பு வாதங்களும் முடிந்து, தீர்ப்பு வெளியிடப்படும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தீர்ப்பு இன்னும் ஒருவாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். அந்தத் தீர்ப்பு வெளியான பிறகு, தமிழகத்தை ஆளும் அரசு நீடிப்பதற்கான வாய்ப்பே கிடையாது.

குட்கா வழக்கில், திமுகவைச்  சேர்ந்த நான் உட்பட 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு தடைகேட்டு நாங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதுமட்டுமல்ல, அதிமுக ஆட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தது தொடர்பாக, எங்களுடைய சட்டமன்ற கொறடா சக்கரபாணி மூலமாக தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு எதிர்வரும் 13-ம் தேதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்று, முடிவு வெளியாகும்.

மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் இருக்குமா?

மத்திய பட்ஜெட் வெளியான பிறகு அதுகுறித்த கருத்துகளை தெரிவிக்கிறேன்.

கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ.வின் ஆட்களால் தாக்கப்பட்ட ஒரு பெண் உயிரிழந்து இருக்கிறாரே?

மர்மமான முறையில் அவர் உயிரிழந்து இருக்கிறார். எனவே, இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x