Published : 22 Dec 2023 06:06 AM
Last Updated : 22 Dec 2023 06:06 AM
சென்னை: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 190 நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுகாதாரத் துறை, அப்போலோ மருத்துவமனை இணைந்து பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடத்தின. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது: தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை தாழ்வான பகுதியில் இருப்பதால், அங்கு நீர்வரத்துஅதிகரிக்க தொடங்கியது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு 10-க்கும்மேற்பட்ட நோயாளிகள் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அன்றிலிருந்து இன்று வரை ஜெனரேட்டர்கள் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
50-க்கும் மேற்பட்ட ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் மழைநீர் புகுந்துவிட்டது. இதையடுத்து மோட்டார் மூலம் அதை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 17-ம் தேதி முதல் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு 2 இலக்க எண்ணில் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் மிதமான பாதிப்பாகத்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மருத்துவ முகாமில், ரத்த அழுத்தம், சிறுநீரகம், எக்கோ, இசிஜி, முழு ரத்தப் பரிசோதனை, காசநோய் கண்டறிதல் போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை,கண் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், இதயமருத்துவம் உட்பட பல்வேறு வகையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. 250-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் முகாமில் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT