Published : 22 Jan 2018 07:39 AM
Last Updated : 22 Jan 2018 07:39 AM

அரசுப் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டம்: இன்று மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்; 27-ல் திமுக, காங்கிரஸ் போராட்டம்

அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதிக்கின்றன. இதன்படி, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. வரும் 27-ம் தேதி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வு நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திடீரென அதிக கட்டணம் கொடுக்க வேண்டியிருப்பதால் நடத்துநர் - பயணிகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. சாலை மறியல், பேருந்துகள் சிறைபிடிப்பு, ஆர்ப்பாட்டம் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

திருச்சி

கட்டண உயர்வைக் கண்டித்து தஞ்சாவூர்- கல்லணை சாலையில் திருப்பூந்துருத்தியில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர்- கல்லணை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் முன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். கரூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி, புதுக்கோட்டை, அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை, கோவை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சூலூரில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூலூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே எஸ்பிஎஸ் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கட்டண உயர்வை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சத்தியமங்கலம் காவல் துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடி கிராமத்தில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதேபோல், வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேலத்தில் இருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்குச் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியை அரூர் அடுத்த சின்னாங்குப்பம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல் வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது. கல் வீசியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே கல்லுப்பட்டி கிராமத்தில் அரசு, தனியார் பேருந்துகளை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சிகள் போராட்டம்

அனைத்து எதிர்க்கட்சிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் வரும் 27-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நாளையும் (ஜனவரி 23), மாவட்டத் தலைநகரங்களில் 24-ம் தேதியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

24-ம் தேதி பாஜகவும் 25-ம் தேதி பாமகவும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளன. பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கட்டண உயர்வைத் தொடர்ந்து ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எவ்வளவு மக்கள் ரயில் பயணத்துக்கு மாறுவார்கள் என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிந்த பின் கூடுதலாக ரயில்களை இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவை இருந்தால், கூடுதல் ரயில் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கட்டணம் உயர்த்தப்பட்ட முதல் நாளில் மட்டும் வழக்கமாக வசூலாகும் தொகையைவிட சுமார் ரூ.8 கோடி அதிகமாக போக்குவரத்துக் கழகங்கள் ஈட்டியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x