5 நாட்களுக்குப் பிறகு நெல்லை தாமிரபரணியில் தணிந்தது வெள்ளம்

படங்கள்: மு.லெட்சுமிஅருண்
படங்கள்: மு.லெட்சுமிஅருண்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடந்த 5 நாட்களாக தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம் நேற்று தணிந்தது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங் களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால் பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், காட்டாற்று வெள்ளத்தாலும் தாமிரபரணியில் 1 லட்சம் கன அடிக்குமேல் வெள்ளம் கரைபுரண்டது.

இதனால் ஆற்றங்கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. திருநெல்வேலியில் கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை உள்ளிட்ட ஆற்றங்கரையோர குடியிருப்பு களை வெள்ளம் சூழ்ந்ததால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப் பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வெள்ளம் தணிந்துள் ளது. இதனால் ஆற்றங்கரையோர கோயில்களின் கோபுரங்கள் வெளியே தலைகாட்டி யிருக்கின்றன. இதுபோல் ஆற்றங்கரையோர மண்டபங்களும் வெளியே தெரிகின்றன. ஆறு பெருக்கெடுத்த வழிநெடுக, கரையோரங்களில் துணிமணிகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை மரங்களை போர்த்தியிருக்கின்றன.

அதி.கனமழையின் போது அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து இருந்ததால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. பாப நாசம் அணையிலிருந்து 3,926 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக தாமிரபரணியில் ஆர்ப்பரித்த வெள்ளம் தணிந்துள்ளது. பொது மக்கள் ஆற்றங்கரையோரங்களில் வழக்கம் போல் குளிக்கவும் துணி துவைக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in