

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது ஏன்? என்பதற்கு மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: அணைகளின் நீர்இருப்பை பொறுத்தமட்டில் முதல் நாளிலிருந்து எவ்வளவு கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்பதை நாங்கள் அறிவித்துக் கொண்டிருந்தோம். 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறபோது, இது 1 லட்சத்தை தொடும் என்பதையும், வெள்ளப் பெருக்கு வருகிறது என்பதையும் நாங்கள் குறுஞ் செய்தி மூலமாக அனைவருக்கும் முன்னரே தெரிவித்திருக்கிறோம். அதற்குப் பிறகு இரவு கடுமையாக, தொடர்ச்சியாக மழை பெய்த போது, கூடுதலாக 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால்தான் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருக்கக் கூடியவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போயிருக்கிறோம். ஆனால் இது தொடர்பாக குற்றச்சாட்டை யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உண்மை நிலவரம் இது தான். கரையோர மக்களுக்கு எந்தவிதமான அறிவிப்பு இல்லாமல் இருந்திருந்தால், 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறபோது, எவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
நாங்கள் முன்னரே அறிவித்த காரணத்தால் தான் பல பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு கனஅடி தண்ணீர் வரப்போகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வர வேண்டும் என்பதற்கு பத்திரிகையாளர் ஒத்துழைப்பையும் கேட்டிருந் தோம். காவல் துறை, தீயணைப்புத் துறையினர் அங்கிருந்து பலபேரை வெளியேற்றிய காரணத் தினால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி சிலர் அங்கே இருந்திருக்கிறார்கள். இருந்தவர்களை யும் அடுத்த நாட்களிலிருந்து படகுகளை பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து , அவர்களை காப்பாற்றியிருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.