

கோவில்பட்டி: கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் கிராமத்தில் உள்ள கண்மாய் கரையோரத்தில் குடிசை மற்றும் மண் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதனால், இந்த வீடுகளில் குடியிருந்து வந்த பட்டியல் சாதி அருந்ததியர் மற்றும் பட்டியல் பழங்குடியினர், காட்டு நாயக்கன் வகுப்பைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கீழ ஈரால் கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடுகள் கட்டித் தர வேண்டும், அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியினர் மற்றும் கீழ ஈரால் மக்கள் நேற்று மாலை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் குடியிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைச் செயலாளர் பீமா ராவ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசு, கனியமுதன், மகாராஜா மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனனர். அவர்களிடம் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், வட்டாட்சியர் லெனின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தை அவர்கள் கை விட்டனர்.