Published : 01 Jul 2014 12:03 PM
Last Updated : 01 Jul 2014 12:03 PM

மவுலிவாக்கத்தில் மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்பு: இரண்டு பேருக்கு சிகிச்சை - மூன்றாவது நாளாக மீட்பு பணி

மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மூன்றாவது நாளாக மீட்புப்பணிகள் நடந்தன. இதில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் கடந்த 28-ம் தேதி மாலை இடிந்து தரைமட்டமானது. இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் என சுமார் 2 ஆயிரம் பேர் இரண்டு ஷிப்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை காலை 7.30 மணி அளவில் இடிபாடுகளை அகற்றும்போது, ஒரு பெண்ணின் உடல் அசைவதை மீட்பு குழுவினர் கவனித்தனர். இதையடுத்து, கட்டிட இடிபாடுகளை அகற்றி, அந்த பெண்ணை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு மேல் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணை உயிருடன் மீட்ட மீட்பு குழுவினரை, போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

மீட்கப்பட்ட பெண் கூறுகையில், “என்னுடைய பெயர் நீலம்மாள் (45). கட்டிடம் இடிவதற்கு முன்பு நாங்கள் 5 பேர் கட்டிடத்தின் ஓரிடத்தில் இருந்தோம். கட்டிடம் இடிந்த பிறகு, நாங்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டோம். என்னைப் போலவே அவர்களும் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களையும் எப்படியாவது மீட்கவேண்டும்” என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அதன்பின், அந்த பெண் அடையாளம் காட்டிய இடத்தில் மீட்புப் பணி வேகமாக நடை பெற்று வருகிறது. இது நடந்த சிறிது நேரத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோவிந்த் (19) என்ற இளைஞரை மீட்புக் குழுவினர் மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலமும் சிறிது நேரத்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. இதையடுத்து, இருவரின் உடலும் பிரேதப்பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாலை 5 மணி அளவில் ஆந்திராவை சேர்ந்த பத்மாவதி (19) என்ற பெண்ணின் சடலத்தையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். இவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 42 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. படுகாயமடைந்த 22 பேருக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும், தலையில் காயமடைந்த சுசிலா என்ற பெண்ணுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அழுகியதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மவுலிவாக்கத்தில் இடிந்து தரைமட்டமான கட்டிடத்திலிருந்து இதுவரை 20 பேர் சடலமாகவும், 23 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 29 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இவர்களில் பலர் உயிரிழந்து இருக்கக்கூடும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அழுகத் தொடங்கியதால், துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது.

துர்நாற்றத்தை போக்க கட்டிட இடிபாடுகள் மற்றும் சாலைகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மீட்புக் குழுவினர் அனைவரும் முகமூடி அணிந்து கொண்டே, மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அனைவரும் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர். துர்நாற்றம் மேலும் அதிகரிக்கும் என்பதால், அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x