தென்மாவட்ட வெள்ளம் காரணமாக ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ ஒத்திவைப்பு: திருமாவளவன்

திருமாவளவன் | கோப்புப்படம்
திருமாவளவன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தென் மாவட்ட வெள்ளம் காரணமாக 29-ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த விசிக மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிச. 23-ம் தேதி அன்று திருச்சிராப்பள்ளியில் ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ நடைபெறுவதாக அறிவித்திருந்தோம். ஆனால், எதிர்பாராத வகையில் கடந்த டிச. 4-ம் தேதி அன்று சுழன்றடித்த கடும் புயல் மற்றும் கனமழையால், பெருக்கெடுத்தோடிய பெருவெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வட மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அங்கே இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கே பல நாட்கள் தேவைபட்டன. இன்னும் பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப இயலாத நிலையே நீடிக்கிறது.

எனவே, இக்கட்டான இந்த சூழலில் நமது மாநாட்டு தேதியை டிச. 29-ம் தேதி அன்று நடத்துவதாக மாற்றி அறிவித்தோம். அதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்த வேளையில், மீண்டும் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் தென்மாவட்டங்களில் வானம் பிய்த்துக்கொண்டு கொட்டுவது போல் பெருமழை கொட்டிவிட்டது. அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இம்மழைக்குப் பலர் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளன. சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. பல வீடுகள் முற்றிலும் இடிந்துபோய் உள்ளன சேதமடைந்துள்ளன. உணவுக்கும் குடிநீருக்கும் மக்கள் திண்டாடும் நிலை இருக்கிறது. ஏராளமானோர் ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடுந்துயரில் அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களுக்குத் தொடரும் நிலையே உள்ளது. இந்நிலையில், நமது கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களுடன் நேற்றும் இன்றும் நடைபெற்ற சூம் இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநாட்டினை 2024 ஜனவரி திங்கள் மூன்றாவது வாரத்தில் தள்ளி வைத்து நடத்தலாம் என கூறியுள்ளனர். எனவே, ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ ஜனவரி இறுதியில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது. முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்கள் ஆகிய அனைவரோடும் கலந்து பேசிய பின்னர் மாநாட்டுக்கான நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in