பொன்முடிக்கு சிறை தண்டனை முதல் தென்மாவட்ட மக்களுக்கான நிவாரண நிதி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.21, 2023

பொன்முடிக்கு சிறை தண்டனை முதல் தென்மாவட்ட மக்களுக்கான நிவாரண நிதி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.21, 2023
Updated on
3 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி 3 ஆண்டு சிறை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பதவி வகித்து வந்த பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, 30 நாட்கள் அவகாசத்திற்குள் சரணடையாவிட்டால், தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறைகளை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் துறைகள் ஒதுக்கீடு: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித் துறையை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த துறைகளை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த கதர், கிராமத்தொழில் துறை, அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தென்மாவட்டங்களில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பாதிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், "மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5000-ஐ ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மழையினால் 33 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இரவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500-லிருந்து ரூ.17,000 ஆக உயர்த்தியும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு அதிகமாக சேதமடைந்திருந்தால் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000-லிருந்து ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு அதிகமாக பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக் குஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410-ல் இருந்து ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தென்மாவட்டங்களில் கால்நடைகளுக்கு இழப்பீடு: ரூ.33,000-ஆக இருந்த எருது, பசு,உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை, ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். ரூ.3000 ஆக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை, ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு மீன்பிடி வலைகள் உள்பட ரூ.32,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கிடவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.15,000 வழங்கிடவும் தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நிவாரண நிதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்: அதிகனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6,000 வழங்கப்படும்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்திலே கொண்டு, அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

பொன்முடி வழக்கில் தீர்ப்புக்கு வரவேற்பு: “திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள்” என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

“தாமதமாக இருந்தாலும்கூட நல்ல தீர்ப்பு வந்துள்ளது” என அமைச்சர் பொன்முடி சிறைத்தண்டனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

சஸ்பெண்ட் எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக அதிகரிப்பு: மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’என்ற பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து டெல்லியில் உள்ள விஜய் சவுக் வரை ஊர்வலமாக சென்றனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதாக்கள்: பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 2023 வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேறியது.

அதே போல், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னர், நாடாளுமன்ற மக்களவை ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ஆன பிரிஜ் பூஷனின் உதவியாளர்!: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கும் உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை நடந்த தேர்தலில் சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பல்வேறு பொறுப்புகளில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர்களே வென்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் - பிரசாந்த் கிஷோர் கருத்து: அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் என 3 மாநிலங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றியால் மட்டுமே பாஜக மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் எனச் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார், தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர். அதேவேளையில் இப்போதைய சூழலில், இண்டியா கூட்டணியைவிட வலுவான நிலையில் பாஜக இருக்கிறது என்றார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in