

சென்னை: தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பயணம் செய்யவிருந்த நிலையில், அப்பயணம் நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பயணம் செய்யவிருந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரு நாள் ஒத்திவைக்கப்படுகிறது.
இன்றைக்கு மாற்றாக நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார் என்றும் மழை - வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடும் அவர், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்; அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.
தூத்துக்குடியில், மழை வெள்ளத்தில் மூழ்கி 16 பேரும், சுவர் இடிந்து விழுந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்துள்ளனர். 20 பேரின் உடல்களும் முதலில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று காலையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.