

தூத்துக்குடி: தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அடித்து செல்லப்பட்ட பாலத்துக்கு அருகே தற்காலிக சாலை அமைத்து போக்குவரத்து நேற்று காலை தொடங்கப்பட்டது.
ஆனால், நிவாரண உதவி கிடைக்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் 4 இடங்களில் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. காலை முதல் மாலை வரை சாலை மறியல் போராட்டம் நீடித்ததால் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நீண்ட தொலைவுக்கு அணி வகுத்து நின்றன.
கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு, தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார் புரம் அருகேயுள்ள பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே மூன்று நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் திருநெல்வேலியில் இருந்து மறவன்மடம் வரை மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அங்கிருந்து தூத்துக்குடிக்கு சுமார் 5 கி.மீ., தொலைவு மக்கள் நடந்தே வந்தனர். அதுபோல திருநெல்வேலி சென்றவர்களும் சுமார் 5 கி.மீ., தொலைவுக்கு நடந்து சென்று, அதன் பின் பேருந்துகளில் பயணித்தனர்.
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்தோணியார் புரம் பாலம் அருகே தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று காலை 9 மணி முதல் தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே போக்குவரத்து தொடங்கியது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் நிலைமை சீராகாததால், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் நேற்று காலை முதல் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வழியாக இயக்கப்பட்டன.
இந்நிலையில் காலை 10 மணியளவில் கோரம்பள்ளம் பகுதி மக்கள் சுமார் 500 பேர் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறி, கோரம்பள்ளம் அரசினர் ஐடிஐ முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி ஏடிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின் சுமார் 1 மணி நேரம் கழித்து பொது மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
சிறிது நேரத்தில் கோரம்பள்ளம் சந்திப்பு பகுதியில் திரண்ட அப்பகுதிமக்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அது போல் அய்யனடைப்பு சந்திப்பு பகுதியில் அய்யனடைப்பு ஊராட்சிக்கு உட்பட்ட மக்களும், மறவன்மடம் சந்திப்பு பகுதியில் மறவன் மடம் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் போக்கு வரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இரு மார்க்கங்களிலும் வந்த பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணி வகுத்து நின்றன. மாலை 4 மணியை தாண்டியும் 5 மணி நேரத்துக்கு மேலாக மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. எம்.பி., எம்எல்ஏ வர வேண்டும் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், சாலையை சீரமைத்து போக்குவரத்தை தொடங்கியும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.