Published : 21 Jan 2018 04:06 PM
Last Updated : 21 Jan 2018 04:06 PM

ரயில் கட்டணத்தை உயர்த்தி பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது: வாசன்

ரயில் கட்டணம் குறித்த ஆய்வுக்குழு அறிக்கையின் பரிந்துரைப்படி, ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தும் முயற்சியில் மத்திய ரயில்வே துறை ஈடுபடக்கூடாது என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ரயில் பயணக் கட்டணம் குறித்து ஆய்வு செய்த குழு அளித்த அறிக்கையை ரயில்வே வாரியம் மறுபரிசீலனை செய்து பயணிகளின் கட்டணம் உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் ரயில் போக்குவரத்து மிகவும் இன்றியமையாத, முக்கியமான போக்குவரத்தாகும். எனவே ரயில்களை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்துவதோடு, கட்டணமும் நியாயமாக இருப்பதில் மத்திய ரயில்வே துறை உறுதியாக இருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் கூறி ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தும் முயற்சியில் மத்திய ரயில்வே துறை ஈடுபடக்கூடாது.

தற்போது ரயில் கட்டணம் குறித்து ஆய்வு நடத்திய ஆய்வுக்குழு ரயில்வே வாரியத்திடம் அறிக்கையை சம்ர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் ரயில் கட்டண உயர்வு இடம் பெற்றிருப்பது ஏற்புடையதல்ல.

குறிப்பாக பண்டிகை காலங்களில் ரயில் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது பண்டிகை காலங்களில் பயணம் செய்யும் ஏழை, எளியவரும், திடீரென்று பயணம் செய்ய வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள்தான் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் போது ரயில் கட்டணத்தையும் அந்தந்த ரயில்வே மண்டலங்களே அதிகரித்துக்கொள்ளலாம் எனவும், அதிகாலை மற்றும் வசதிபட்ட நேரத்தில் சென்றடைகிற ரயில்களின் ரயில் கட்டணத்தை உயர்த்தலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதை ரயில்வே வாரியம் ஏற்கக்கூடாது. அதே போல இரவு நேர ரயில்களில் ப்ரீமியம் கட்டணம் வசூல் செய்யலாம் என்பதையும் 10 சதவீத இருக்கைகள் பதிவு செய்த பிறகு 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தலாம் என்பதையும், 50 சதவீதம் வரை இந்த கட்டண உயர்வு இருக்கும் என்பதையும் தவிர்க்க வேண்டும்.

எனவே ரயில்வே வாரியத்திடம் ரயில் கட்டணம் குறித்து ஆய்வு செய்த குழு சமர்ப்பித்த அறிக்கையை ரயில்வே வாரியம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாகவும், கட்டணம் குறைவாக இருக்கும் விதமாகவும் இருக்கின்ற பரிந்துரைகளை ஏற்க முன்வர வேண்டும்.

மேலும் மத்திய அரசு ரயில்வே துறையை லாபத்தில் இயக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பதை குழு மூலம் ஆய்வு செய்து அதற்குண்டான பணிகளை செய்ய வேண்டும். அதனை விட்டுவிட்டு ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

எனவே ரயில் பயணக் கட்டணம் குறித்து ஆய்வு செய்த குழு அளித்த அறிக்கையை ரயில்வே வாரியம் மறு பரிசீலனை செய்து பயணிகளின் கட்டணம் உயராமல் பார்த்துக்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x