Published : 20 Jan 2018 04:20 PM
Last Updated : 20 Jan 2018 04:20 PM

மன்னன் தவறு செய்தால் என்ன தண்டனை என சட்டத்தில் இல்லை: 2ஜி குறித்த தன் நூல் பற்றி ஆ.ராசா பேட்டி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்துவதற்கு சி.ஏ.ஜி. தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மன்னன் தவறு செய்தால் என்ன தண்டனை என்று சட்டத்தில் இல்லை என்று திமுக முன்னாள் எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

நூல் வெளியீடு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட திமுக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா 2ஜி அலைக்கற்றை தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். '2G Saga Unfolds' என பெயரிடப்பட்ட அந்த நூல் 19-ந்தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

பாஜகவுடன் கூட்டணியா

இந்நிலையில், திமுக முன்னாள் எம்.பி. ஆ.ராசா தன்னுடைய நூல் குறித்து இன்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் திமுக எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்குமா எனக் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர் அளித்த பதிலில், ''இது குறித்து திமுக தலைமையும், மூத்த தலைவர்களும்தான் முடிவு செய்வார்கள். திமுகவைப் பொறுத்தவரை மதச் சார்பற்ற கட்சி. அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது'' என்று தெரிவித்தார்.

விரைவில் தமிழ்பதிப்பு

தான் எழுதிய புத்தகம் குறித்து அவர் கூறுகையில், ''இந்த நூலில் 2ஜி அலைக்கற்றை தொடர்பாக 99 சதவீத விவரங்களையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் தமிழ்பதிப்பை விரைவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிடுவார்.

துரோகம்

2ஜி அலைக்கற்றை வழக்கைப் பொருத்தவரை, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு தவறான விவரங்கள் சி.ஏ.ஜி. எனச் சொல்லப்படும் மத்திய தலைமை தணிக்கை அலுவலகம் மூலம் தரப்பட்டுள்ளது. முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் தான் வகித்த பதவிக்கே துரோகம் செய்து இருக்கிறார்.

மவுனத்தால் ஆட்சி போனது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறு நடந்தது போல் காட்டப்பட்ட சி.ஏ.ஜி.யின் அறிக்கையை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் நம்பிவிட்டார். மன்மோகன் சிங் மவுனத்தாலே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பறிபோனது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்த்த சி.ஏ.ஜி. மூலம் சதி செய்யப்பட்டது.

இங்கு மன்னன் தவறு செய்தால் என்ன தண்டனை என்று சட்டத்தில் இல்லை.

தி.மு.க. பாதுகாத்தது

2ஜி அலைக்கற்றை குற்றச்சாட்டு என் மீது எழுந்தபோது, என்னை ஒரு குழந்தை போல் திமுகவும், தலைவர் கருணாநிதியும், செயல் தலைவர் ஸ்டாலினும் பாதுகாத்தனர். அவர்கள்இல்லை என்றால் இன்று ஆ.ராசா இல்லை.

இவ்வாறு ஆ. ராசா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x