Published : 21 Dec 2023 06:20 AM
Last Updated : 21 Dec 2023 06:20 AM

ஐந்தரை மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஒப்பந்த லாரி ஓட்டுநர்கள் பணி புறக்கணிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் நேரடியாக குப்பை அகற்றப்படுகிறது. மற்ற மண்டலங்களில் தனியார்மூலம் குப்பை அகற்றப்படுகிறது. மாநகராட்சியின் நிரந்தர ஓட்டுநர்கள் ஓய்வு பெறுவது, பணிக்காலத்தில் இறப்பு போன்ற காரணங்களால் ஏற்படும் ஓட்டுநர் காலிப்பணியிடங்களை, ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மாநகராட்சி நிரப்பி வருகிறது. தண்டையார்பேட்டை மண்டலம், பெரம்பூர் பிபி சாலையில் மாநகராட்சி லாரி நிலையம் இயங்கிவருகிறது. அங்கு 50 நிரந்தர ஓட்டுநர்கள், 30 ஒப்பந்த ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். 2 மாதங்களாகபுதிய ஒப்பந்ததாரரின் கீழ் பணியாற்றிவருகின்றனர். முந்தைய ஒப்பந்ததாரர் 3 மாத ஊதியத்தை வழங்கவில்லை. புதிய ஒப்பந்ததாரரும் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

அதனால் நேற்று காலை 6 மணிக்கு மாநகராட்சி செங்கொடிசங்கம் ஆதரவுடன் 30 ஒப்பந்த ஓட்டுநர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக செங்கொடி சங்கத்தினர் கூறும்போது, ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்க கோரி,மாநகராட்சி இயந்திர பொறியியல் துறையில் பலமுறை புகார் தெரிவித்திருந்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். இந்நிலையில், முந்தைய ஒப்பந்ததாரர் 2 மாத ஊதியத்தை நேரில்வந்து கையில் ரொக்கமாக கொடுத்துள்ளார். மீதி தொகையை வரைவோலையாக கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதனை தொடர்ந்துகாலை 8.30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் லாரிகளை இயக்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x