Published : 21 Dec 2023 06:05 AM
Last Updated : 21 Dec 2023 06:05 AM
சென்னை: சென்னையில் புத்தகக் காட்சி ஜன.3 தொடங்கி ஜன.21-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர்சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 47-வது சென்னை புத்தகக் காட்சி - 2024 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் ஜன.3-ம் தேதி புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஜன.3-ம் தேதி தொடங்கி ஜன.21-ம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1,000 ஸ்டால்கள் இடம்பெறும் என்றும் ஏறக்குறைய 20 லட்சம் பேர் புத்தகக்காட்சிக்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள் உரை இடம்பெறும்.
புத்தகக் காட்சியில் சிறந்த அறிஞர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதும், பபாசி விருதும் வழங்கப்படவுள்ளது. இந்த புத்தகக் காட்சி தொடர்பான முழு தகவல்கள் ஜன.2-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது, பபாசி பொருளாளர் சுரேஷ், இணை செயலாளர்கள் துரை மாணிக்கம், சாதிக் பாஷா, லோகநாதன், கமிட்டி உறுப்பினர்கள் அருணாச்சலம், செந்தில்நாதன், அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT