

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மீட்பு, நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளக்காடு, முத்தையாபுரம், ஸ்பிக் நகர், பழைய காயல் பகுதிகளில் ஆய்வு செய்து, வெள்ள நீர் விரைவாக வெளியேற நடவடிக்கை மேற்கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கால்டுவெல் காலனி, பெரியசாமி நகர், சத்யா நகர், ஸ்டேட் பேங்க் காலனி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்து, வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டார். தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கம், கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் மாப்பிள்ளையூரணி, காமராஜர் நகர், திரேஸ் நகர், பாலமுத்து நகர், சோட்டையன் நகர், பத்திரகாளியம்மன் கலையரங்கம், காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதை பார்வையிட்டார்.
கனிமொழி எம்.பி., தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் சென்று ஏரல் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும், அங்கிருந்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணையும் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.
தொடர்ந்து, சோரீஸ்புரம் மற்றும் அய்யனடைப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார். பால் வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பால் விநியோகம் சீராக நடைபெற அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி பகுதி முழுவதும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீர் ஓரளவுக்கு வடிந்துள்ளதால் போக்குவரத்து சீரடைந்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் நேற்று மின் விநியோகம் சீரானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளனர்.