Published : 11 Jan 2018 10:21 PM
Last Updated : 11 Jan 2018 10:21 PM

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: 8 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி மத்தியஸ்தராக பத்மநாபனை நியமித்ததை அடுத்து 8 நாட்கள் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன், நிலுவைத்தொகை போன்ற கோரிக்கைகளை வைத்து 11 முறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தோல்வி அடைந்ததை அடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுதும் போக்குவரத்து முடங்கியது. பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள்.

இது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பல கட்ட வழக்கு விசாரணைக்குப் பின் போக்குவரத்து தொழிலாளர் ஓய்வூதியம், ஊதிய உயர்வு அனைத்து பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து மணிக்குமார் அமர்வு இன்று உத்தரவிட்டது. ஊதிய வித்தியாசங்கள் குறித்தும் ஓய்வூதியம், நிலுவைத்தொகை போன்றவற்றை அவர் மூலமாக பேசி தீர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனசாட்சிப்படி யோசித்து முடிவெடுங்கள் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. தொழிற்சங்கம் தரப்பில் ஓய்வூதியம், ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரவேண்டும், போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும், அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை ரத்து செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அரசுத் தரப்பில் தற்போதைக்கு 2.44 என்று ஏற்கெனவே அறிவித்த ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடியாது, போராட்டம் நடத்திய காலத்திற்கு ஊதியம் வழங்க முடியாது என்றும், போராட்டம் நடத்தியவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்திருந்தால் அந்த வழக்குகளை வாபஸ் வாங்க முடியாது என்றும் தெரிவித்தார். வேண்டுமென்றால் மத்தியஸ்தர் ஒருவரை நியமித்தால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் நலன் பாதிக்கப்படக் கூடாது, பண்டிகை காலங்களில் அவர்கள் சிரமமின்றி இருக்க வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றம் இவ்வளவு தூரம் அரசையும் தொழிற்சங்கத்தையும் கேட்டுக்கொள்கிறது. ஆகவே அதை கருத்தில் கொள்ளுங்கள்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக அனைத்து பிரச்சினைகளையும் பேசித் தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிப்பதாக தெரிவித்தனர். பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட வேண்டும் என்பதை கோரிக்கையாக வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொமுச தலைவர் சண்முகம், சிஐடியூ தலைவர் அ.சவுந்தரராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர். யார் மீதும் நடவடிக்கை இல்லை. அப்படி எடுத்தால் நீதிபதிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை குறிப்பிட்டனர்.

இந்த அரசை வழிக்கு கொண்டு வந்துள்ளோம், நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாகச் செல்லுங்கள் என்று கூறினர். நாளை காலை முதல் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x