Published : 20 Dec 2023 05:17 AM
Last Updated : 20 Dec 2023 05:17 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் வரலாறு காணாத மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. சில பழமையான வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்நிலையில், ஆற்றங்கரையிலிருந்து பல கி.மீ. தொலைவில் உள்ள கான்கிரீட் வீடு வெள்ளத்தால் சரிந்து விழுந்த காட்சி சமூகவலைதளங்களில் வைராலாகியது.
அந்த வீடு நெல்லை டவுன் பெரிய தெருவில் உள்ள வி.சங்கரன் என்பவருக்குச் சொந்தமானது. அங்குள்ள கூட்டுறவு அச்சகத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது 4 பிள்ளைகள் திருமணமாகி, வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.
திருநெல்வேலி கால்வாய் நீரும்,குளங்கள் உடைந்து வெளியேறிய தண்ணீரும் பெரிய தெருவுக்குள் பாய்ந்தது. தண்ணீரின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் சங்கரன் வீடு தரைமட்டமானது.
வீடு இடிந்த சோகத்தில் இருந்துமீளாத சங்கரன் கூறியதாவது: தொடக்கத்தில் குடிசையாக இருந்த வீட்டை 1997-ல் கான்கிரீட் வீடாக மாற்றிக் கட்டினேன். அப்போது ரூ.1 லட்சம் செலவானது. ஒருஹால், சமையலறை, கழிப்பறையுடன் 223 சதுர அடியில் வீடு அமைந்திருந்தது. 2003-ல் மாடி கட்டினேன்.
ஒரு மகள், 3 மகன்களுக்கு திருமணம் முடித்துவிட்டேன். எனதுமகள் டவுனில் உள்ள மற்றொரு பகுதியில் வசிக்கிறார். அங்கு எனதுபேத்திக்கு கடந்த 1-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்காகவீட்டைப் பூட்டிவிட்டு, அங்கு சென்று தங்கியிருந்தோம். நேற்று முன்தினம் வெள்ளம் வந்து கொண்டிருந்ததால் வீட்டிலிருந்த பொருட்களை அப்புறப்படுத்தி, மாடிக்கு எடுத்துச் சென்று வைத்துக்கொண்டிருந்தேன்.
வீட்டின் சுவரில் கீறல்கள் ஏற்பட்டுள்ளதாக பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறி, பக்கத்துக்கு வீட்டுக்குசென்றுவிட்டேன். அடுத்த அரை மணிநேரத்தில் என் கண்முன்னே வீடு இடிந்து தரைமட்டமாகி விட்டது. சிறுகச் சிறுக சேமித்து கட்டிய வீடு இடிந்ததைப் பார்த்து மிகவும் வேதனையடைந்தேன். பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வீடு இடிந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து, வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு சங்கரன் கண்ணீருடன் தெரிவித்தார்.
திடீரென வீடு இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து திருநெல்வேலியை சேர்ந்த கட்டிடப் பொறியாளர் ஆர்.மிதுன்சேகர் கூறும்போது, "தண்ணீர் பாய்ந்தோடிய வேகத்தில், வீட்டின் ஒருபுறம் அழுத்தம் ஏற்பட்டிருக்கும். மேலும், நீண்டநேரம் தண்ணீர் சூழ்ந்ததால், அஸ்திவாரத்தின் கீழ் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டிருக்கும். இதனால் அஸ்திவாரம் இறங்கி, ஒட்டுமொத்த கட்டிடமும் தரைமட்டமாகிவிட்டது.
பழைய கட்டுமானம் என்பதால் இந்த வீட்டில் வெள்ளம், நில அதிர்வைத் தாங்குவதற்கு ஏற்ப இரும்புக் கம்பிகள், சிமென்டாலான கான்கிரீட் தூண்கள் அமைக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் வீடு இடிந்து விழுந்துவிட்டது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT