

சென்னை: முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ஓய்வுபெற்ற டிஜிபி நட்ராஜூக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்த கோயில்களை இடித்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், ஓய்வுபெற்ற டிஜிபியுமான ஆர்.நட்ராஜ் மீது திமுக வழக்கறிஞர் ஷீலா என்பவர் திருச்சி எஸ்பியிடம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் ஆர்.நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் பல்வேறு பிரிவுகளி்ன் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நட்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நடந்தது. அப்போது நட்ராஜ் தரப்பில் அதே வாட்ஸ்-அப் குழுக்களில் தன்னைப்பற்றியும் அவதூறாக விமர்சித்துவருவதாகவும், அவர்கள் மீதுஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, ஓய்வுபெற்ற டிஜிபி நட்ராஜூக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது என்னநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டும், அதுவரை நட்ராஜ் மீதானவழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் விசாரணையை வரும் ஜன.19-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.