Published : 20 Dec 2023 06:17 AM
Last Updated : 20 Dec 2023 06:17 AM
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக, சென்னை- நெல்லை இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்று (டிச.20) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த அதி கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடானது. பல இடங்களில் ரயில்தண்டவாளம் மழை நீரில் மூழ்கியது. இதனால், 50-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவைகள்கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நேற்றும் பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புறப்படவேண்டிய நெல்லை விரைவு ரயில் (12632), திருநெல்வேலி- மதுரை இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு மதுரை யில் இருந்து புறப்பட்டது. தூத்துக்குடி - சென்னை எழும்பூருக்கு நேற்று புறப்பட வேண்டிய முத்துநகர் விரைவு ரயில் (12694)மதுரையில் இருந்து புறப்பட்டது. நாகர்கோவில் - தாம்பரத்துக்கு இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (20692) நாகர்கோவில் - விருதுநகர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுதவிர, கொல்லம் - சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய அனந்தபுரி விரைவு ரயில் (20636), கொல்லம் - கோவில்பட்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுதவிர, 40 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று புறப்பட்ட நெல்லை விரைவு ரயில் (12631), மதுரை வரை இயக்கப்பட்டது. சென்னை - தூத்துக்குடிக்கு இயக்கப்படும் முத்துநகர் விரைவு ரயில்,மதுரை வரை மட்டும் இயக்கப் பட்டது. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இருமார்க்கமாகஇன்று (டிச.20) இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டது. திருச்செந்தூர் - சென்னை எழும்பூருக்கு இன்று (டிச.20) புறப்படவேண்டிய விரைவு ரயில் (20606),திருச்செந்தூர் - கோவில்பட்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, இந்த ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT