Published : 10 Jan 2018 09:24 PM
Last Updated : 10 Jan 2018 09:24 PM

பெருங்குடியில் ஆண் குழந்தையை கடத்திய நபர் கைது: பாசப்போராட்டத்திற்குப் பின் குழந்தை மீட்பு

பெருங்குடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கடத்தப்பட்ட குழந்தையை போலீஸார் மீட்டனர். தன் குழந்தையாக வைத்து வளர்த்த நபரிடமிருந்து குழந்தை வர மறுத்ததால் பெரும் போராட்டத்திற்குப் பின் குழந்தை மீட்கப்பட்டது.

துரைப்பாக்கம் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் வசிப்பவர் குருசாமி(32). இவரது மனைவி பிரேமலதா(28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது ஆண் குழந்தை விஸ்வா(2) கடந்த மாதம் 25-ம் தேதி அன்று மாலை 7 மணியளவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனது.

அடையாளம் தெரியாத யாரோ ஒரு நபர் கடத்திச் சென்று விட்டதாக குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீஸார் குழந்தை காணவில்லை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். குழந்தையை கடத்திச் சென்ற நபரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு அருகிலுள்ள அனைத்து கடைகள் மற்றும் முக்கியமான இடங்களிலுள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு நபர் குழந்தையை கையில் பிடித்து அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதில் சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பதிவு எண்ணைக் கொண்டு ஆய்வு செய்ததில் அந்த இரு சக்கர வாகனம் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அவரை விசாரணை செய்ததில் மகேந்திரனின் நண்பன் திருவேற்காட்டைச் சேர்ந்த மாணிக்கம் (28) என்பவர்தான் குழந்தையை கடத்தியது எனத் தெரிய வந்தது.

போலீஸார் விசாரணையில் மாணிக்கம் கடந்த டிச.25 அன்று பெருங்குடி கல்லுக்குட்டையில் வசிக்கும் அவருடைய தாயார் முத்துலட்சுமியை சந்தித்து பின்னர் பக்கத்து தெருவில் வசிக்கும் மகேந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று மது அருந்தியுள்ளார். அதன் பின்னர் தன் தாயாரிடம் தனது வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு திருவேற்காட்டிற்கு புறப்பட்டு சென்றவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து கடத்திச் சென்றுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையை மாணிக்கம் திருவேற்காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் என்று தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று திருவேற்காடு சென்ற தனிப்படை போலீஸார் மாணிக்கத்தை கைது செய்து குழந்தையை மீட்டனர். பின்னர் குழந்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணிக்கம் அயப்பாக்கத்தில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.

மாணிக்கத்திடம் இருந்து குழந்தையை மீட்க வீட்டுக்கு போலீஸார் சென்றபோது குழந்தை புதுத்துணி அணிந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தது. போலீஸார் அழைத்தும் குழந்தை மாணிக்கத்தை விட்டு வர மறுத்துவிட்டது. பெரும் பாசப்போராட்டத்திற்கு பின் குழந்தையை அழுகையினூடே போலீஸார் மீட்டனர்.

விசாரணையில் மாணிக்கம் தனது தாயாரைப் பார்த்துவிட்டு வரும் போது சாலையில் தனியாக நின்றிருந்த குழந்தையைப் பார்த்து சிரித்து,  'வருகிறாயா' என்று கேட்டவுடன் உடனே வந்துள்ளது. உடனே மாணிக்கம் குழந்தையை அழைத்துக்கொண்டு திருவேற்காடு வந்துள்ளார். மனைவி கேட்டபோது சாலையில் அனாதையாக நின்றிருந்தது நமக்குத்தான் குழந்தை இல்லையே நாமே வளர்ப்போம் என்று கூறியுள்ளார்.

மறுநாள் குழந்தைக்கு புதுத்துணிகள், விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக்கொடுத்து பார்த்துக்கொண்டனர். நாளடைவில் குழந்தையும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டது. குழந்தையை வெள்ளந்தியாக மாணிக்கம் கடத்தினாலும் குழந்தைக்கு பெற்றோர் உள்ளனர், சட்டம் உள்ளது என்பதை மறந்துவிட்டார். கைது செய்யப்பட்ட மாணிக்கம் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x