Published : 19 Dec 2023 04:40 PM
Last Updated : 19 Dec 2023 04:40 PM
திருநெல்வேலி: "தூத்துக்குடி, நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தேன். 3 நாட்களாக உணவு கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை, மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, இனிமேலும் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்காமல், வேகமாக, துரிதமாக செயல்பட வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "கடந்த டிச.3-ம் தேதி மாலை தொடங்கி டிச.4-ம் தேதி பகல் வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி வீட்டிலிருந்து மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதெல்லாம் முதல்வருக்கு கண்ணுக்குத் தெரியவில்லை. பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழு, தமிழக அரசை பாராட்டிவிட்டுச் சென்றதை கூறி வருகிறார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்றுகேட்டால், இந்த அரசுக்கு என்ன பாராட்டு கிடைக்கும் என்பது தெரியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முறையாக எடுக்காததால், மக்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 85 சதவீதம் முடிக்கப்பட்ட பஹீல் ஓடையின் எஞ்சிய பணிகளை முடித்திருந்தால், அந்த ஓடையைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கியிருக்காது. நெல்லை அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கி அங்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை வெள்ளத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் எல்லாம் சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே, வாகன பழுது பார்க்கும் முகாம்கள் அமைத்து பழுது நீக்கம் செய்துதர வேண்டும்.
கனமழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அந்தப் பகுதிகளை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எனவே, இந்த அரசு மெத்தனப்போக்கை விட்டுவிட்டு வேகமாக, துரிதமாக, செயல்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். அதிகனமழை பெய்ததால் திருநெல்வேலியில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதேநேரத்தில், பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் தொலைத் தொடர்பை அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரயிலில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, ரயில் பயணிகள் அவர்கள் செல்கின்ற ஊர்களுக்குச் செல்ல வாகன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
தூத்துக்குடி, நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தேன். 3 நாட்களாக உணவு கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை, மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனிமேலும் இந்த அரசு தூங்கிக்கொண்டிருக்காமல், வேகமாக, துரிதமாக செயல்பட வேண்டும். இது மக்கள் பிரச்சினை. இதை அரசியலாக்க நாங்கள் விரும்பவில்லை. மக்கள் உணவு கிடைக்காமல் 3 நாட்களாக பரிதவிக்கும் காட்சி வெட்கக்கேடானது.
தலைமைச் செயலாளர் 600 படகுகள் அனுப்பியதாக கூறுகிறார். ஆனால், அந்தப் பகுதிகளில் ஒரு படகுகூட செல்லவில்லை. மக்கள் வெளியே வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டுள்ளனர். மக்கள் இவ்வாறாக குறை கூறுகின்றனர். ஆனால், ஊடகங்களில் அனைத்து அமைச்சர்களும் அழகாக பேட்டிக் கொடுக்கின்றனர். மக்களை சந்தித்தோம், உணவளித்தோம், முகாம்களில் தங்கவைத்தோம் என அமைச்சர்கள் பச்சை பொய்யை பேசுவது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் இந்திய வானிலை மையம் முறையாக எச்சரிக்கவில்லை என்று கூறுகிறார். உண்மையில், தமிழக அரசு செயலற்று இருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், மக்கள் துன்பத்தில் வேதனையில் தத்தளித்துக் கொண்டுள்ளனர்" என்று இபிஎஸ் கூறினார்.
முன்னதாக, டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு தமிழ்நாடு இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “டிச.18, 19-ம் தேதிகளில் அதி கனமழை இருக்கக்கூடும் என்பதை சென்னை வானிலை மையம் 17-ம் தேதி அளித்தது. வானிலை மையம் குறிப்பிட்ட மழை அளவை விட பல மடங்கு அதிகமான மழைப்பொழிவு இம்மாவட்டங்களில் பொழிந்தது. இதனால் அப்பகுதிகளே வெள்ளக்காடானது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒருநாளில் கொட்டித் தீர்த்தது. வானிலை மையத்தின் எச்சரிக்கை சற்றே தாமதமாக கிடைத்தாலும், அளித்த தகவலை விட அதிகமான மழைப்பொழிவு இருந்தாலும் தமிழக அரசு முன்கூட்டியே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது” என்று கூறினார். அவரது பேட்டி இங்கே முழுமையாக > நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு: டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் தகவல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT