Published : 27 Jan 2018 04:25 PM
Last Updated : 27 Jan 2018 04:25 PM

சென்னையை அடுத்து திருச்சியில் துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது: சென்னை போலீஸும் சிக்கினார்

வேப்பேரியில் நேற்று 6 பிஸ்டலுடன் 2 பேர் கைதான நிலையில், திருச்சி பிரபல தங்கும் விடுதியில் கள்ளத்துப்பாக்கிகளுடன் சென்னை போலீஸ்காரர் ஒருவர் சிக்கினார். உடனிருந்த இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு(OCIU) ஆய்வாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில் திருச்சியில் தங்கும் விடுதியில் கள்ளத்துப்பாக்கிகளுடன் மூன்று பேர் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதை அடுத்து செந்தில்குமார் தலைமையிலான ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் திருச்சி விரைந்தனர். திருச்சி ஓட்டல் அஷோக், கல்பனா இரண்டிலும் தங்கியிருந்த மூன்று நபர்களை சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

மூன்று பேரையும் போலீஸார் பிடித்து அவர்களை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து கள்ளத்துப்பாக்கிகள், 10 ரவுண்ட் தோட்டாக்கள் அவர்களிடம் சிக்கியது.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணை நடத்திய போலீஸார் அவர்களைப்பற்றிய தகவலை அறிந்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பிடிபட்ட 3 பேரில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஆவார். சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பரமேஸ்வரன்(29) என்பவர்தான் அவர்.

கூடுதல் பணியாக தற்போது பேசின்பாலம் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். இவருடன் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், பட்டுக்கோட்டையைச்சேர்ந்த சிவா ஆகியோரும் பிடிபட்ட மற்ற இரண்டு பேர் ஆவர்.

சென்னையில் நேற்று இரண்டு இளைஞர்கள் 6 பிஸ்டல்கள், ரூ.4 லட்சம் கள்ளப்பணத்துடன் சிக்கியதும் அதைத்தொடர்ந்து திருச்சியில் போலீஸ்காரர் உட்பட 3 பேர் பிடிபட்டதும் அதன் தொடர்ச்சியா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

தமிழகத்தில் சமீப காலமாக துப்பாக்கிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதும், ரவுடிகள் தாதாக்களுக்கு வடமாநிலங்களிலிருந்து கும்பல் ஒன்று துப்பாக்கிகளை வாங்கி வந்து சப்ளை செய்வதும் அதிகரித்து வருகிறது. அரிவாள் கலாச்சாரத்திலிருந்து துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ரவுடிகள், தாதாக்கள் மாறுவதையே இது எடுத்துக்காட்டுகிறது.

குற்றத்தைத் தடுக்கவேண்டிய காவலரே குற்றவாளியாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இன்னும் யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது? சென்னையில் பிடிபட்ட கும்பலுக்கும் திருச்சி கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? இவர்களின் நெட்வொர்க் என்ன என்கிற ரீதியில் இதற்கான தனிப் பிரிவு போலீஸார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x