

சென்னை: மதுரை யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.பகவத்சிங் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்கக்கோரி 2006-ம் ஆண்டே தமிழக அரசு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரைத்துள்ளது. அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழியாக அறிவிக்கப்படவேண்டுமென்பதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினா கடற்கரையின் திருவள்ளுவர் சிலை அருகே டிச.20 முதல் சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியிருந்தேன். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். எனவே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,‘‘உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற மனுதாரரின் நோக்கம், எண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் அதற்கு இதுபோன்ற சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் சரியாக இருக்காது. ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்பட்டு எந்த பலனும் இல்லை. சட்டபுத்தகங்களை எளிமையான தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது. அடிமட்ட அளவில் இருந்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார். பின்னர் மனுதாரர் தனது கோரிக்கைக்காக எந்த வகையில் போராட்டம் நடத்தினால் அனுமதிதரப்படும் என்பது குறித்து போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (டிச.20) தள்ளிவைத்தார்.