

கோவை: கோவையில் அரசு திட்டப்பணிகளின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதே விமானத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியும் கோவைக்கு வந்தார். இந்த விமானம் நேற்று காலை 9.20 மணிக்கு பீளமேடு விமான நிலையத்துக்கு வந்தது. இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வந்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அவர் காரில் நாமக்கல் புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை அமைச்சர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அரசு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் 3.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புது டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 4.15 மணிக்கு கோவையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.