

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியின் அருகே மழை நீர் வரத்து ஓடை உள்ளது. இந்த ஓடையில் பல இடங்களில் தடுப்புகளும், ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இந்நிலையில், தொடர் மழை காரணமாக அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் நீர் நிரம்பி, இந்த ஓடையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இந்நிலையில், குடியிருப்புகளை சூழந்த மழை நீரையும், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் தூத்துக்குடி சாலையில் நேற்று மறியல் செய்தனர்.
அவர்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைநீரை வெளியேற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.