Published : 19 Dec 2023 04:08 AM
Last Updated : 19 Dec 2023 04:08 AM
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக மழையின்றி பனிப் பொழிவு அதிகரித்தது. இந்நிலையில், குமரி கடலில் உருவான காற்று சுழற்சி காரணமாக கடந்த 16-ம் தேதி மழை பெய்யத் தொடங்கியது.
முதல் நாளில் தென்காசி மாவட்டத்தில் லேசான மழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் மழை தீவிரம் அடைந்தது. மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் இடைவிடாமல் மிதமான அளவில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். நேற்று காலை 9 மணிக்கு மேல் படிப்படியாக மழை ஓய்வு பெறத் தொடங்கியது. இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு: குண்டாறு அணை 509.80 மி.மீ., செங்கோட்டை 301.60 மி.மீ., கடனாநதி அணை 220 மி.மீ., ஆய்க்குடி 212 மி.மீ., ராமநதி அணை 206 மி.மீ., தென்காசி 166 மி.மீ., சிவகிரி 148.50 மி.மீ., கருப்பாநதி அணை 130 மி.மீ., சங்கரன்கோவில் 78 மி.மீ., அடவிநயினார் அணை 76 மி.மீ. மழை பதிவானது.
அடவிநயினார் அணை தவிர மற்ற 4 அணைகளும் நிரம்பிவிட்டதால் அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 5460 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 1726 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 451 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 180 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் மின் தடை ஏற்பட்டது. இதனால் குளிர், இருளில் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மின் தடையை நிவர்த்தி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு, படிப்படியாக மின் விநியோகத்தை சீரமைத்தனர். மேலும், தொலைத் தொடர்பு வசதிகளும் பாதிக்கப்பட்டதால் அவசர உதவிகளை பெற முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT