

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் திருநெல்வேலி - தென்காசி நான்குவழச் சாலையோரத்தில் தொட்டியான்குளம் உள்ளது.
இந்த குளத்தில் ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு கிழக்கு பகுதியில் புதுப்பட்டி ரோட்டில் இருந்து நெட்டூர் ரோடு விலக்கு வரை குளத்தின் கரை அகற்றப்பட்டு, தற்காலிக கரை அமைக்கப்பட்டு திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் தொட்டியான் குளம் நிறைந்து, தற்காலிக கரையில் உடைப்பு எற்பட்டது. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி, திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலை வழியாக வயல்களில் புகுந்தது. இதனால் ஏராளமான நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. தென்காசி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
இதேபோல் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கண்டப்பட்டி குளத்தின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், ஆலங்குளம் காவல்துறையினர் விரைந்து சென்று, பொக்லைன் வாகனம் மூலம் கண்டப்பட்டி சாலையை உடைத்து வயல் வெளி பகுதிக்குள் தண்ணீரை திருப்பி விட்டனர். இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
தென்காசி மலையான்தெரு பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசித்த 26 பேர் வெளியேற்றப்பட்டு, சமுதாயநலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். சங்கரன்கோவில் கோவிந்தபேரி தெப்பக்குளத்தில் சுற்றுச்சுவர் கனமழையில் இடிந்து விழுந்தது. இதனால் அதன் அருகில் உள்ள சாலையில் வாகனங்கள் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் கயிறு மற்றும் தடுப்புக் கம்பிகள் அமைத்தனர். அதன் அருகில் உள்ள சேந்தமரம் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
சேர்ந்த மரம் சாலையில் உள்ள ஓடையில் உடைப்பு ஏற்பட்டதால் இந்திரா நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது. சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சங்கரன்கோவிலில் உள்ள கண்மாய் முழு கொள்ளளவை எட்டி மருகால்பாய்ந்து வருவதால் பாட்டத்தூர், தளவாய்புரம் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் தங்களது வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.