Published : 19 Dec 2023 04:08 AM
Last Updated : 19 Dec 2023 04:08 AM

குமரியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசித்த 553 பேர் மீட்பு - நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

கிள்ளியூர் அருகே ஏழுதேசம் அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை ராஜேஷ் குமார் எம்எல்ஏ, குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் சந்தித்து தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 553 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஞ்சி சிறை பகுதியில் உள்ள மங்காடு சப்பாத்து பாலம், பள்ளிக்கல், வைக்கலூர் ஆற்றுப் பகுதி, பரக்காணி செக் டேம் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பத்மநாப புரம் சார் ஆட்சியர் கவுசிக் ஆகியோர் பார்வையிட்டு வெள்ள மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

பின்னர் ஆட்சியர் ஸ்ரீதர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் வெள்ளத்தால் எற்பட்ட பாதிப்புகள் குறித்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கவும்,

வாய்கால்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள குப்பைகள் மற்றும் ஆகாயத் தாமரைகள், மரக்கிளைகள், செடிகளை அகற்றவும் பொதுப்பணித் துறை, நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை படிப்படியாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகஸ்தீஸ்வரம் வட்டம் பறக்கின்கால் பகுதியில் 7 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், பெருமாள்புரம் பகுதியில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 146 பேர் கன்னியாகுமரி பேரிடர் நிவாரண மையத்திலும், ரவி புதூர் பகுதியில் 21 குடும்பங்களை சேர்ந்த 53 பேர் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், நல்லூர் பகுதியில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் கோட்டவிளை அரசு தொடக்கப் பள்ளியிலும், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 30 பேர் கிருஷ்ணா திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல் தோவாளை அண்ணா நகர் பகுதியில் 213 பேர், திருப்பதி சாரம் பகுதியை சேர்ந்த 35 பேர், மங்காடு பகுதியை சேர்ந்த 11 பேர், குழித் துறை பகுதியை சேர்ந்த 15 பேர் என மொத்தம் 176 குடும்பங்களை சேர்ந்த 553 நபர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் காலத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதையும், குளிப்பதையும் பொதுமக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.

ஆய்வின் போது ராஜேஷ் குமார் எம்எல்ஏ, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன்., கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x