Last Updated : 01 Jan, 2018 04:43 PM

 

Published : 01 Jan 2018 04:43 PM
Last Updated : 01 Jan 2018 04:43 PM

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து: மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது 29 இடங்களில் சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டன.  இதுதவிர அரியாங்குப்பத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்களைத் தடுக்கப் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கடற்கரைச் சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இரவு சரியாக 12 மணியானவுடன் அனைவரும் புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். உற்சாகத்தில் கூச்சலிட்டனர். இதனையடுத்து போலீஸார் கூட்டத்தினரை கடற்கரைச் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

மதுக்கடைகளில் மது அருந்திய நிலையில் சாலைகளில் வேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்லும் சம்பவங்களும் நிகழ்ந்தது.

அரியாங்குப்பத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிதம்பரம் கீரப்பாளையத்தைச் சேர்ந்த பட்டயப்படிப்பு 3 -ம் ஆண்டு மாணவர் செல்வகணபதி (18), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பட்டயப்படிப்பு முடித்துவிட்டு மேல் படிப்பு படித்து வந்த மாணவர் அப்துல் ரகுமான் (20) ஆகியோர் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்குப் புத்தாண்டு கொண்டாட வந்திருந்தனர்.

மோட்டார்சைக்கிள்களில் வந்த அவர்கள், புத்தாண்டு கொண்டாடி விட்டு இன்று அதிகாலை தங்கள் ஊருக்குப் புறப்பட்டனர்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் அரியாங்குப்பம் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக செல்வகணபதி, அப்துல் ரகுமான் சென்ற மோட்டார் சைக்கிள், பாலத்தில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக நண்பர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும் வரும் வழியிலே இறந்தனர்.

இதுபற்றி கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x