

சென்னை: தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மழை குறித்த வானிலை முன்னறிவிப்பு ஏமாற்றம் தருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்திய மழை வெள்ளத்துக்கு பிறகு நமது வானிலை ஆய்வுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் இதுபோன்ற இயற்கை பேரழிவு நேரங்களில் நமது ஒருங்கிணைந்த இயக்கம் என இரண்டையும் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். வானிலை முன்னறிவிப்பில் துல்லியமான கணிப்பு என்பது ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது. மழையின் வீரியம் குறித்து சரியாக கணிக்கப்படவில்லை. மழை எச்சரிக்கை போதுமான அவகாசம் அளிக்கும் வகையில் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய வானிலை மாதிரிகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்தும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டு பேசி உள்ளார்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை தொடர் மழை பெய்ததால் மழை வெள்ளம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.