

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகனமழை பெய்து வருகிறது. வரும் செவ்வாய்க்கிழமை வரையில் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப மாவட்டம் முழுக்க 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய், காவல் மற்றும் தீயணைப்புத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து அந்தந்த பகுதிகளில் பணிகளை செய்து வருகிறார்கள். 243 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 20 முகாம்கள் திறக்கப்பட்டு அவற்றில் 980 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சராசரியாக 25 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வரலாறு காணாத மழையளவாகும். மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து அங்குள்ள மக்களை முகாம்களுக்கு அனுப்ப கேட்டுக் கொண்டுள்ளோம். மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கென்று தனியாக சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும் பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 60 ஜேசிபி தயார் நிலையில் உள்ளன. தாமிரபரணியில் நீர்வர்தது அதிகரித்துள்ள நிலையில் கரையோர பகுதி மக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக, அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் மின்தடை செய்யப் பட்டிருந்தாலும், உடனுக்குடன் மின்தடை சரி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தாமிரபரணி ஆற்றில் 33,600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக 47 ஆயிரம் கனஅடி வரையில் அதிகரிக்க கூடும். வெள்ளநீர் கால்வாயில் பரிட்சார்த்த முறையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்துக்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகளின் 6 குழுக்களை சேர்ந்த 163 பேர் வந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.