கனமழையால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை: தமிழக அரசு

கனமழையால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை: தமிழக அரசு
Updated on
1 min read

சென்னை: கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று (டிச.18) பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தொடர்ந்து மழை பொழிந்து வருகின்ற காரணத்தால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று (டிச.18) நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் மக்களும் தடையின்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அதன் காரணமாக தாழ்வான மற்றும் வெள்ள அபாயம் நிலவும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை காரணமாக 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகளும் இந்த 4 மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை ஆட்சியர் அலுவலக பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்று இந்த 4 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசுப் பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கி உள்ளது. இதே போல நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சாலைகள் மழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று கைவிடப்பட்டுள்ளது. நெல்லை ரயில் நிலையம் நீர் சூழ்ந்து காணப்படுவது இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in