

மதுரை: மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இம்மாத இறுதியில் அல்லது ஜனவரி மாதத்துக்குள் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணியுடன் இணைய வரும் அனைவரோடும் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்று அமமுகபொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.
மதுரை, நெல்லை மண்டல அமமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மதுரைக்கு நேற்று வந்த கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமமுக தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதத்துக்குள் அறிவிப்போம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
அந்த வகையில், முன்னாள்முதல்வர் பன்னீர்செல்வம் எங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். எங்கள் கூட்டணியில் இணைய வரும் அனைவரோடும் சேர்ந்து பணியாற்றத் தயாராக உள்ளோம்.
நாடாளுமன்றத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து, வண்ண புகை குப்பிகளை வீசிய விவகாரத்தில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நாடாளுமன்றத்தில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை: திமுக ஆட்சி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதன்படி செயல்படவில்லை. அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.