Published : 18 Dec 2023 05:43 AM
Last Updated : 18 Dec 2023 05:43 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே முற்காலப் பாண்டியர் காலத்து யோக வீரபத்திரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சுழியில் பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் கள ஆய்வாளர்கள் தர் மற்றும் தாமரைக்கண்ணன் ஆகியோர் கள ஆய்வு நடத்தியபோது, யோக வீரபத்திரர் சிற்பம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: யோக வீரபத்திரர் சிற்பம்3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில்,புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் தலைப் பகுதியில் மகுடத்துடன் கூடிய விரிந்த ஜடாபாரமும், காதுகளில் அணிகலன்களும், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரி நூலும் செதுக்கப்பட்டுள்ளன. நான்கு கரங்கள் உள்ளன.
அழகாக வடிக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தின் வடிவமைப்பைக் கொண்டு, 9 அல்லது 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, முற்காலப் பாண்டியரின் கைவண்ணத்தில் உருவான சிற்பம் என்று அறியலாம். மேலும், அதே காலகட்டத்தைச் சேர்ந்த சப்த மாதர் தொகுப்பும், ஓர் அரிகண்ட சிற்பமும் இங்கு காணப்படுகின்றன. இதன் மூலம் இங்கு பழமையான சிவன் கோயில் இருந்து, அழிந்திருக்கலாம். இவ்வாறு பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT