மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற உழைக்க வேண்டும்: கட்சியினருக்கு கேசவவிநாயகம் அறிவுறுத்தல்

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற உழைக்க வேண்டும்: கட்சியினருக்கு கேசவவிநாயகம் அறிவுறுத்தல்

Published on

திருச்சி: வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற, கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் கூறினார்.

பாஜக திருச்சி பெருங்கோட்ட மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம், திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை வகித்து கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் பேசியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக அரசின் சாதனைகள், பிரதமர் மோடி கொண்டுவந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள40 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற, கட்சியினர் அனைவரும் பாடுபட வேண்டும். மேலும், திமுக ஆட்சியின் அவலங்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்துக்கு, கட்சியின் திருச்சி பெருங்கோட்டப் பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான கருப்பு முருகானந்தம், மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை பாஜக திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in