

திருநெல்வேலி: வரும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
திருநெல்வேலிக்கு நேற்று வந்த அவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எண்ணூரில் எண்ணெய் கழிவு கடலின் முகத்துவாரப் பகுதிகளில் கலந்ததற்கு, மத்திய அரசின் எண்ணெய் நிறுவன கவனக்குறைவே காரணம். இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சதவீத அடிப்படையில் அதிகரித்துள்ளன. தேர்தலில் தோற்றாலும், இண்டியா கூட்டணி கொள்கை பிடிப்புடன் செயல்பட்டு வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி பெரும்பான்மையுடன் நிச்சயம் வெற்றிபெறும்.
நாடாளுமன்றத்தில் சிலர் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சகம் இதுவரை உண்மையான தகவல்களை தெரிவிக்கவில்லை. மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அச்சப்படுகிறார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால், வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர்.
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கே.எஸ்.அழகிரி கூறினார்.