

சென்னை: எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு, கடல் பகுதியில் காணப்படவில்லை என இந்தியக் கடலோர காவல் படை உறுதிப்படுத்தி உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, எண்ணூர் கழிமுகப்பகுதி மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் வரை வடிகால் வெள்ள நீரில் எண்ணெய் கசிவு காணப்பட்டது. இதையடுத்து, கடந்த 10-ம் தேதி இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வின் மூலம் கொசஸ்தலையாற்றின் முகத்துவாரத்துக்கு அருகில் உள்ள கடலோர நீரில்எண்ணெய் தடயங்கள் கண்டறியப்பட்டன. எண்ணெய் கசிவின் அளவு 20 சதுர கி.மீ பரப்பளவில் பரவியது, கசிவு அளவு தோராயமாக 10 டன்கள் என மதிப்பிடப்பட்டது. உடனடியாக, எண்ணெய் படலத்தை கரைப்பதற்கு வான்வழியாக ஹெலிகாப்டர் மூலமாக கரைப்பான்களும் தூவப்பட்டன.
அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொசஸ்தலையாற்றின் வழியாக கடலில் கலக்கும் வெள்ளம் குறைந்ததாலும், கழிமுகப் பகுதிக்குள்ளேயே எண்ணெய் சிக்கியதாலும், கடலில் எண்ணெய் படலம் காணப்படவில்லை என கண்டறியப்பட்டது. ஆனால், கழிமுகத்தில் தங்கியுள்ள எண்ணெய்யை அகற்றும் பணி அவசியமானது. இதை சுத்தம் செய்யும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கலந்துள்ள எண்ணெய் பற்றி மதிப்பீடு செய்தல், சுத்தம் செய்தல் மற்றும் மீட்டெடுப்பதற்கு கடலோர காவல்படை, சிபிசிஎல் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தேவையான ஆலோசனைகளை கடலோர காவல்படை வழங்கி வருகிறது. மேலும், கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றன. கடலோரப் பகுதியில் எண்ணெய் படலம் தற்போது ஏதும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது என இந்தியக் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.