Published : 18 Dec 2023 06:14 AM
Last Updated : 18 Dec 2023 06:14 AM
சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பதவிக்கான 685 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கும் என மொத்தம் 11,117 பேருக்கு சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து எழுத்துத் தேர்வை நடத்தியது. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 9,352 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கான மதிப்பெண் நவ.27-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் நடைமுறை தேர்வுக்காக அழைப்பு கடிதம் அனுப்பப்படுகிறது. அதன்படி, டிச.28-ம் தேதி முதல் ஓட்டுநர் தேர்வு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்வர்கள் கூறும்போது, "அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வை முடித்துள்ளோம். இதையடுத்து ஓட்டுநர் நடைமுறைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் போன்றவற்றை போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனம் நடத்துகிறது. அவர்கள் அரசின் அறிவுறுத்தல்படியே செயல்படுவார்கள்.
50 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக சுமார் 100 மதிப்பெண் அவர்கள் கையில்தான் இருக்கிறது. எனவே, நினைத்த மதிப்பெண்ணை வழங்கி முறைகேட்டில் ஈடுபடுவதற்கான சூழல் இருக்கிறது. ஏனெனில், கடந்த முறை நேர்காணலின்போது தேர்வான அனைவரது பெயரையும் பென்சிலில் குறிப்பிட்டு, பின்னர் பணம் வழங்கியவர்கள் பெயரை பேனாவில் மாற்றி எழுதி இறுதி பட்டியல் வெளியிட்டதாகவே குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அதுபோன்ற நிலையை தவிர்க்கும் வகையில், நாள்தோறும் ஓட்டுநர் நடைமுறைத் தேர்வில் பங்கேற்போரின் மதிப்பெண்களை, அன்று மாலையே அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நேர்மையான முறையில் நியமனம் நடைபெறும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT