

சென்னை: சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவில் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம் சிலையை அமைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் டி.ஆர். சுந்தரத்தால் 1930-களில் தொடங்கப்பட்டது. 1982 வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களை தயாரித்த பெருமைக்குரியது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் குடியிருப்புகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், அங்கு நினைவு வளைவு மட்டும்தான் மீதமுள்ளது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய டி.ஆர்.சுந்தரத்தின் புகழ் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
எனவே, அவரது சிலையை நினைவு நுழைவாயிலில் வைக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் மற்றும் அவரது உறவினர்களின் விருப்பமாகும். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை வைக்க முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாகக் கூறி, அந்த இடத்தை ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வலியுறுத்துவதாக நில உரிமை யாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் நில உரிமையாளர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவு அருகே நிறுவனர் டி.ஆர்.சுந்தரத்தின் சிலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாநிதி சிலையை அங்கு வைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.