Published : 18 Dec 2023 04:08 AM
Last Updated : 18 Dec 2023 04:08 AM
மதுரை: நாட்டில் அனைத்து மாவட்டங் களிலும் தங்க நகை விற்பனையில் கட்டாய ஹால்மார்க் சட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணையை, உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
விருதுநகரைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: உலக நாடுகளில் தங்கம் பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 600 டன் தங்கம் விற்பனையாகிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு 2018-ல் தங்க நகை தரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதை கட்டாயமாக்கியது.
2021-ம் ஆண்டு முதல், 2 கிராம் அல்லது அதற்கும் மேற்பட்ட எடை கொண்ட தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரையுடன் எச்யுஐடி எண்களும் பொறிக்கப்பட வேண்டும். எச்யுஐடி எண் என்பது மனிதர்களுக்கு வழங்கப்படும் ஆதார் கார்டு எண்களை போல் தங்க நகைகளுக்கு வழங்கப்படும் தனி எண். இந்த எண்ணை பயன்படுத்தி மொபைல் செயலி வழியாக அந்த நகையின் தரம் மற்றும் அனைத்து தரவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
இருப்பினும், இத்திட்டம் நாட்டில் உள்ள 800-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 343 மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. 36 மாநிலங்களில் 25 மாநிலங்களில் மட்டுமே கட்டாய ஹால்மார்க் நடைமுறையில் உள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களிலும், லடாக், அந்த மான் மற்றும் நிக்கோபார் தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் - டையூ மற்றும் லட்சத் தீவு யூனியன் பிரதேசங்களிலும் கட்டாய ஹால்மார்க் சட்டம் நடை முறையில் இல்லை.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில்தான் கட்டாய ஹால்மார்க் சட்டம் அமலில் உள்ளது. கட்டாய ஹால்மார்க் திட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கும், மத்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கும் எதிரானது. மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
எனவே, தங்க நகைகள் விற்பனை செய்யும் போது, ஜிஎஸ்டி ரசீதில் எச்யுஐடி எண் கட்டாயம் அச்சிடவும், அனைத்து மாவட்டங்களிலும் ஹால்மார்க் சட்டத்தை கட்டாயமாக அமல் படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை முக்கிய மானதாகத் தெரிகிறது. இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT