Published : 17 Dec 2023 04:56 PM
Last Updated : 17 Dec 2023 04:56 PM

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடம்: திருநெல்வேலி | படம்: ஏ.ஷேக் மொகிதீன்

சென்னை: தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் இன்று காலை முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் கனமழை: கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் நகரின் பல்வேறு இடங்களிலும், அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி, 30,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் 30 முதல் 50 செ.மீ மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கரைப்பட்டியில் 20 செ.மீ மழைப்பதிவு: இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, அம்பாசமுத்திரத்தில் 13.1 செ.மீ மழையும், சேரன்மகாதேவியில் 14.7 செ.மீ மழையும், மணிமுத்தாறில் 13.6 செ.மீ மழையும், நாங்குநேரியில் 18.6 செ.மீ மழையும், பாளையங்கோட்டையில் 9 செ.மீ மழையும், பாபநாசத்தில் 14.3 செ.மீ மழையும், ராதாபுரத்தில் 19.1 செ.மீ மழையும், திருநெல்வேலியில் 10.5 செ.மீ மழையும்,சேர்வலாறு அணையில் 9.8 செ.மீ மழையும், கன்னடியன் அணையில் 12.5 செ.மீ மழையும்களக்காட்டில் 16.2 செ.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 15.4 செ.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 20 செ.மீ மழையும், நம்பியாறு அணையில் 18.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அணைகளின் நீர்மட்டம் உயர்வு: இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, திருநெல்வேலியின் முக்கிய நீர்தேக்கங்களான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 134.60 அடியை எட்டியுள்ளது. 23,388 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையிலிருந்து 17,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 147.24 அடியை எட்டியுள்ளது. 10,565 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையிலிருந்து 17,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 96.25 அடியை எட்டியுள்ளது. 28,215 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 3 மணிக்குப் பிறகு, இந்த அணைகளிலிருந்து 30,000 கனஅடி திறக்கப்பட உள்ளது. இதனால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, தாழ்வான இடத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது தாமிரபரணியில் அதிகமக வெள்ளம் வருவதால் தாமிரபரணி, நம்பியார், கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்ட கால்வாயில் இன்று மாலை 4 மணிக்கு அம்பை சாலை வெள்ளாங்குழியில் முதல்வரின்ன் உத்தரவுக்கிணங்க வெள்ளோட்டம் பார்க்கும் வகையில் மழை வெள்ள உபரி நீர் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் சூழந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x