

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி கடந்த பிப்.25-ம் தேதி நடத்திய குரூப் 2 மற்றும் 2-ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. பல்வேறு நிர்வாகக் குளறுபடிகளுக்கு இடையே தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகளும் வெளியிடப்படாமல் இருப்பது, தேர்வர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள்10 மாதங்களாக வெளிவராமல் இருக்கிறது. சம்மந்தப்பட்டதுறையின் அமைச்சரோ காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார். இதற்காக திமுக அரசுக்கு கடும்கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில்5.50 லட்சம் பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, தற்போது வரை 2.5 லட்சம் பணிகளுக்கான ஆணைகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், செயலற்ற திமுக அரசு, மற்ற வாக்குறுதிகளைப் போலவே, இதையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது.
டிஎன்பிஎஸ்சி குளறுபடிகளைக் களைவதற்கு, உடனடியாக அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கவேண்டும்.
மேலும், காலி பணியிடங்களை நிரப்ப உடனடியாக தேர்வுகளை நடத்த வேண்டும்.